ஆந்திர முன்னாள் முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் கே ரோசய்யா காலமானார்


 


ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வராகவும், தமிழ்நாட்டின் ஆளுநராகவும் இருந்த பழம்பெரும் அரசியல் தலைவர் கே ரோசய்யா மாரடைப்பு காரணமாக, சனிக்கிழமை காலை காலமானார்.

1933 ஜூலை 4ஆம் தேதி, மதராஸ் மாகாணத்தின் குண்டூரு மாவட்டத்தில் பிறந்தார் ரோசய்யா.

இத்தகவலை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். 2009 - 2010 காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராகவும், 2011 - 2016 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவியில் இருந்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பின்னர், இவர் முதல்வரானார்.

எந்தக் உள்கட்சி கோஷ்டியையும் சேராதவராக இவரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை பார்த்ததால் இவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது.

2014ஆம் ஆண்டு சில மாதங்கள் கர்நாடகாவின் ஆளுநராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக பல முறை சட்ட மேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

போக்குவரத்துத் துறை, நிதித் துறை உட்பட ஆந்திரப் பிரதேச அரசில் பல்வேறு முக்கிய அமைச்சகப் பதவிகளை நிர்வகித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்துக்கு அதிக முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் ரோசய்யா.

2010இல் உடல்நலத்தை காரணமாகக் கூறி ஆந்திர மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

இவரது பதவி காலத்தில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை போராட்டங்கள் தீவிரமாக இருந்தன.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.