அம்பாறை மாவட்டம் பகுதியில் வெளிநாட்டு பறவை இனங்கள்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



அம்பாறை மாவட்டம்  பகுதியில் தற்போது  ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின்  காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள்  சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம் ,சவளக்கடை ,நற்பிட்டிமுனை,  ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர்  நிலைகளை நாடி புதிய கறுப்பு நிறத்தினை உடைய   வெளிநாட்டு  பறவை இனங்கள்  வருகை தருகின்றன.

 குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக அப்பகுதிகளுக்கு பலரும்   வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இம் மாதக் கடைசியில் அம்பாறை மாவட்டத்தில்   பல நாட்டுப் பறவைகளும்  இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி ,பெப்ரவரி  ,மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 2000 மைல்  தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து,ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ்,நைஜரியா,சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா,  கூழைக்கடா,பாம்புத்தாரா,சாம்பல்நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன்,வெள்ளை அரிவாள் மூக்கன், நாரை இனங்கள் அன்னப்பறவை உள்ளிட்ட கொக்கு இனங்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதிக்கு விதவிதமான பறவைகள், இங்கேயே கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, குஞ்சுகளுக்கு பறக்க கற்றுக்கொடுத்து, மார்ச் மாத இறுதியில் புதிய குடும்பமாய் சொந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதும் வழமையாகிவிட்டது.

மேலும் இப்பறவைகள் யாவும் இயற்கை சூழலை பாதுகாப்பதிலும் வேளாண்மை செய்கைக்கு விவசாயிகளுக்கு உதவுவனவாகவும் செயற்படுகின்றன.