சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் - 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.
இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், ஆரம்பம் முதலே இந்தியா நிவாரண பொருட்கள், பொருளாதார தொகுப்புதவி உள்பட பல்வேறு உதவிகளை இலங்கைக்கு செய்து வருகிறது. ஆனால், அத்தகைய உதவிகளை சீனா இலங்கைக்கு வழங்காதிருந்தது.
இந்த நிலையில், பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவி வழங்காவிட்டாலும், இலங்கை மீது தொடர்ந்து தமது நன்மதிப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே யுவான் வாங் 5 கப்பலை சீனா அனுப்பி இருக்கிறது என்று பிபிசி தமிழிடம் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான ஏ.பி.மதன் கூறினார்.
சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங் - 5 கப்பலானது, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இந்த மாதம் 17ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு திட்டமிட்டிருந்தது.
கடந்த மாத நடுப்பகுதியில் சீனாவிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய இந்த கப்பல், வழியில் எந்தவொரு துறைமுகத்திலும் நங்கூரமிடாமல், நேரடியாகவே இலங்கையை நோக்கி பயணித்தது.
இலங்கை திடீர் கோரிக்கை
ஆனால், கப்பல் பாதி வழியில் வந்து கொண்டிருந்த தருணத்தில், இலங்கைக்குள் இந்த கப்பல் அனுமதிப்பதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. இதையடுத்து, சீன கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.
எனினும், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த நேரத்தில் யுவான் வாங் 5 கப்பல் இலங்கை கடல் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது.
இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறைப்படி அனுமதி கிடைக்கப் பெறும் வரை, இலங்கையிலிருந்து சுமார் 600 கடல் மைல் தூரத்திலேயே இந்த கப்பல் மிகவும் குறைந்த வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில், சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வருவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று இந்தியா அறிவித்தது. இந்தப் பின்னணியில், இலங்கை அரசாங்கம் சீனாவின் கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்க இணக்கம் தெரிவித்தது.
இதன்படி, ஆகஸ்ட் 16 முதல் 22ஆம் தேதி வரை சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment