பிரபல சினிமா விமர்சகரும் திரைப்பட டிராக்கருமான எல்.எம்.கௌசிக் நேற்று (ஆக. 15) மாரடைப்பால் காலமானார். யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த கௌசிக், தமிழ் சினிமா பிரபலங்களிடையே எடுக்கப்பட்ட நேர்காணல்களுக்காகவும் திரைப்பட விமர்சனங்களுக்காகவும் இணைய உலகில் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார். தூங்கிக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு கௌசிக் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 35.
இளம் வயதில் மாரடைப்பு காரணமாக கௌசிக் உயிரிழந்திருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் படித்த இவர், சினிமா மீதான ஆர்வத்தால் சினிமா விமர்சகராக பணிபுரிந்து வந்தார். இணையத்தில் பிரபலமான இன்ப்ளூயன்சராகவும் இருந்தார்.
கௌசிக் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். கௌசிக் இளம் வயதில் மரணம் அடைந்திருப்பது குறித்து அதிர்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு கூட, ஊடக சந்திப்பு ஒன்றில் கௌசிக்கை சந்தித்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு கௌசிக்குடன் தான் பேசியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
Twitter பதிவின் முடிவு, 1
Twitter பதிவின் முடிவு, 2
நடிகர் துல்கர் சல்மான் தன் ட்விட்டர் பக்கத்தில், "இச்செய்தி இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என விரும்புகிறேன்.
வாழ்க்கை மிகவும் சிறியது. உங்களின் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. நீங்கள் எப்போதும் நல்ல சினிமாவின் பக்கம் நின்றிருக்கிறீர்கள். இதனை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. என்னை இது தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.
Twitter பதிவின் முடிவு, 3
இதேபோன்று, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் ராகவா லாரன்ஸ், ஹரீஷ் கல்யாண் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக கூட, துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள சீதாராமம் படத்தின் வசூல் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார் கௌசிக்.
இளம் வயதில் உறக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு கௌசிக் உயிரிழந்திருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment
Post a Comment