நூறுல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேச சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, சிறுவர் நலன் மற்றும் மேம்பாடு என்பவற்றை ஆராய்கின்ற பிரதேச சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக் கூட்டம் (DCMC) சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ். சபறுல் ஹஸீனாவின் ஒருங்கிணைப்பில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை இடை விலகள், கல்வி ரீதியான பிரச்சினைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள், சிறுவர்களை மையப்படுத்திய போதைப் பாவனை, இளவயது திருமணம், சிறுவர்களின் சுகாதார மேம்பாடு, விஷேட தேவையுடைய சிறுவர்களின் நலனோம்பல் மற்றும் கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு (VCDC) மற்றும் முன்பள்ளிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு சார்பாக கலந்துகொண்ட திட்டமிடல் உத்தியோகத்தரினால் பால்நிலை வன்முறை தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர் எச்.பி. யசரட்ன பண்டார, இறக்காமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள், இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை அதிபர்கள், சமய நிறுவன தலைவர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment