புதிய நிருவாகம் தெரிவு




வி.சுகிர்தகுமார்   

  அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் பாடசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இராணுவ கப்டனும் பழைய மாணவர் சங்க செயலாளருமான க.ஜனார்த்தனன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் பழைய மாணவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருமான வி.பபாகரன் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர்களான மதியழகன் மற்றும் ஜெயந்தன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்டத்திற்கான பொறியியலாளரும் பாடசாலை பழைய மாணவர் சங்க உபதலைவருமான என்.லோகிஸ் கணக்காளரும் சங்கத்தின் பொருளாளருமான கனிஸ்டன் உள்ளிட்ட பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் சங்க நிருவாக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அதிபர் உரையாற்றுகையில் பாடசாலையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் தான் அதிபராக கடமையேற்றதன் பின்னர் இடம்பெற்றுள்ள கல்வி மற்றும் பௌதீக வள அபிவிருத்தி தொடர்பிலும் குறிப்பிட்டார்.
அத்தோடு பழைய மாணவர் சங்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் சங்கத்தை புனரமைத்து வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து செயலாளர் சென்ற கூட்டறிக்கையினை வாசித்ததுடன் பொருளாளர் கணக்கறிக்கையினை சமர்ப்பித்தார்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய பழைய மாணவ சங்கத்தின் பொருளாளர் உபதலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கி அதனூடாக முன்னெடுத்த பணிகள் தொடர்பில் கூறினர். அத்தோடு புதிய நிருவாகம் ஒன்றினை தெரிவு செய்ய தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டனர்.

இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர் பழைய மாணவ சங்கத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் இதற்காக சிறந்த நிருவாக கட்டமைப்பை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.


இதன் பின்னராக புதிய நிருவாகத்தெரிவு இடம்பெற்றது. பதவி வழியாக அதிபர் தலைமை பொறுப்பேற்றதுடன் செயலாளராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவு செய்யப்பட்டார்.  உபதலைவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்டத்திற்கான பொறியியலாளர் என்.லோகிஸ் பொருளாளராக வைத்தியர் குணாளினி உப பொருளாளராக கணக்காளர் கனிஸ்டன் உப செயலாளராக இயன் மருத்துவர் கரன்ராஜ் உள்ளிட்டவர்கள் தெரிவானார்கள்.

இதன் அடிப்படையில் புதிய நிருவாக கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு நிருவாக சபை உறுப்பினர்களாக 14 பழைய மாணவர்களும் தெரிவானார்கள்.