(வி.ரி.சகாதேவராஜா)
முன்னொருபோதுமில்லாத வகையில் நாடு பொருளாதார நெருக்கடியால் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இதனை மீளக்கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இன்று இருக்கின்ற ஒரே ஒரு தீர்வு சஜித் பிரேமதாசா மாத்திரமே.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் தமிழ்ப்பிரிவு இணைப்பாளருமான வெள்ளையன் வினோகாந்த் நேற்று(12) ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று(12) ஞாயிற்றுக்கிழமை காரைதீவிலுள்ள அம்பாறை ஊடக மையத்தில் இடம்பெற்றது .
அங்கு அவர் மேலும் கூறுகையில்.
இலங்கையில் கடந்த ஆறுதசாப்த காலமாக மக்கள் வாக்களித்து வந்திருக்கின்றார்கள். ஆனால் இம்முறை முதல் தடவையாக ஐக்கிய மக்கள் சக்தி நாட்டில் சகல பாகங்களிலும் தேர்தலில் இறங்கி உள்ளது. 70 -80- 90 களில் ஜனசவிய கம்முதாவ போன்ற பல திட்டங்களை நாட்டுக்கு புகுத்தி மக்களை விமோசனப்படுத்திய அமரர் பிரேமதாச அவர்களின் புதல்வன் சஜித் பிரேமதாசா ஒரே ஒரு முதுகெலும்புள்ள தலைவராக இருக்கிறார்.
ஆளும் கட்சியில் இல்லாமலே தற்போது 70 பாடசாலைகளுக்கு 3400 லட்சம் ரூபாய் பெறுமதியான பஸ்களை வழங்கி இருக்கின்றார். 56 வைத்தியசாலைகளுக்கு 1919 இலட்ச ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 128 லட்ச ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வளவு சேவையை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு செய்தவர் சஜித்.
இங்கு அம்பாறை மாவட்டத்திலேயே 20 உள்ளூராட்சிசபைகள் உள்ளன. ஏழு சபைகள் சிங்கள சபைகள். ஏனைய பதின்மூன்று தமிழ் முஸ்லிம் சபைகளிலே எனக்கு ஆலையடிவேம்பு காரைதீவு திருக்கோவில் ஆகிய பிரதேதேச சபைகள் பொறுப்பு அளிக்கப்பட்டு இருக்கின்றது.
பல பிரச்சினைகளை இனங்கண்டு இருக்கின்றோம். அவற்றை தீர்ப்பதற்கான திட்டத்தையும் வகுத்திருக்கின்றோம். மார்ச் மாதம் ஒன்பதாம் தேதிக்கு பிற்பாடு இவை அனைத்தும் அமுலுக்கு வரும்.


Post a Comment
Post a Comment