!வளமான நாட்டை வைத்துக்கொண்டு அழகான வாழ்க்கையினை தேடி அலைந்தோம்.



 





ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்            


 அம்பாரை மாவட்ட தமிழ்பேசும் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் வாழும் பிரஜாசக்தி தேசிய இயக்கத்தின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களை தெளிவூட்டும் மாபெரும் கூட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்;ஸ அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க ஜனாதிபதி செயலகத்தின் அபிவிருத்தி நிர்வாக பிரிவின் உதவிச்செயலாளர் சாரதாஞ்சலி அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன் அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.பி.முனாசிர் மற்றும் சமூக சக்தி செயலகத்தின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் திட்டமிடல் பணிப்பாளர்கள் பிரஜா சக்தி அமைப்பின் தவிசாளர்கள் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கூட்டத்தின் நோக்கம் பற்றி மாவட்ட செயலாளர் உரையாற்றியதுடன் பிரஜா சக்தி அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் விவரண குறும்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரஜா சக்தி அமைப்பின் நோக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் நடவடிக்கைகள் தொடர்பிலும் பலராலும் தெளிவூட்டப்பட்டது.
இதேநேரம் இங்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா ஆகியோரும் உரையாற்றினர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா உரையாற்றுகையில் ஒரு வளமான நாட்டை வைத்துக்கொண்டு அழகான வாழ்க்கையினை தேடி அலைந்தோம். அதற்காகவே ஜனாதிபதியினால் பிரஜா சக்தி திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. அடிமட்டத்திலிருந்து திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.
கடந்த காலத்தில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி சரியாக மக்களை சென்றடையவில்லை. ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. இதனை மாற்றியமைக்கும் திட்டமாகவே பிரஜா சக்தி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளால் ஒன்றாக இணைந்து எடுக்கப்படும் தீர்மானங்கள் அபிவிருத்தி தி;ட்டங்களாக மாற்றப்படும். இதன் மூலம் நாடு வளம் பெறும். அதற்காக அனைத்து தவிசாளர்கள் செயலாளர்கள் உழைக்க வேண்டும் என்றார்.