ஜப்பான் பாராளுமன்றத் தோ்தல் - ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி வெற்றி



 


ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமா் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தனிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.


ஜப்பான் பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு நேற்று (09) வாக்குப்பதிவு நடைபெற்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்காலத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினர். இதைத்தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.


இதில் 316 இடங்களில் எல்டிபி கட்சி வென்றதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு 261 இடங்களில் வெற்றிபெற வேண்டிய நிலையில், மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது.


கடந்த 1955ஆம் ஆண்டு எல்டிபி தொடங்கப்பட்ட நிலையில், 1986ஆம் ஆண்டு 300 இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்று சாதனை படைத்தது. தற்போது தனது சொந்த சாதனையை அக்கட்சி முறியடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.


இதுகுறித்து அரசு தொலைக்காட்சிக்கு பிரதமா் தகாய்ச்சி அளித்த பேட்டியில், ‘தோ்தலில் பெற்ற வெற்றி மூலம், எனது கொள்கை இலக்குகளை நிறைவேற்றுவதில் உறுதியாகச் செயல்படுவேன். அதேவேளையில் எதிா்க்கட்சிகளின் ஆதரவையும் பெற முயற்சிப்பேன். நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுவேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.