சாய்ந்தமருதில் அல்-அமானா நற்பணி மன்றத்தினால் பெருநாளை கொண்டாட, நிதியளிப்பு



 


நூருல் ஹுதா உமர்)


சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்றத்தினால் தேவை உடைய மக்களுக்கான உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வும், அமைப்பின் பொதுக்கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் புதன்கிழமை மாலை சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்ற காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு அல்-அமானா நற்பணி மன்றத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல். பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது பொருளாதார தட்டுப்பாட்டில் உள்ள குடும்பங்கள், பெருநாளை கொண்டாட வசதியற்ற ஏழைகள், அங்கவீனர்கள், அனாதைகள், விதவைகள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த பலருக்கு பண உதவிகளும் உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உலமாக்கள், பிரதேச செயலக அதிகாரிகள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்தார் நிகழ்வில் விசேட மார்க்க உரையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளைத்தலைவர் எம்.எம்.எம். சலீம் (சர்க்கி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மன்றத் தலைவர் ஏ.எல். பரீட், அமைப்பின் வரலாற்றை நினைவுகூர்ந்தார். 1986 ஆம் ஆண்டு “அன்ஸாரிகள் சங்கம்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஆரம்பத்தில் மீனவர்களின் நலன், மத நடவடிக்கைகள் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக “சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம்” என மாற்றம் பெற்று பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர் மக்களின் தேவைகள் அதிகரித்ததை முன்னிட்டு, 2008 ஆம் ஆண்டு அப்போதைய பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் “அல்-அமானா நற்பணி மன்றம்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக உருவெடுத்து தற்போது பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்த பின்னர் அரசு மேற்குப் பகுதிகளில் காணிகளை வழங்கி குடியிருப்புகளை அமைத்தாலும், அனைவரும் வீடுகளை பெற முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் பலர் அருகிலுள்ள பகுதிகளில் சிறு நிலப்பகுதிகளை வாங்கி தங்களது குடியிருப்புகளை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வீதி அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மன்றம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தேவையுடைய மக்களின் நியாயமான ஆதரவின் மூலம் அவற்றை வெற்றிகரமாக சமாளித்ததாகவும் தெரிவித்தார். வீதிகளுக்கு பெயரிடுதல் தொடர்பாகவும் அவர் கருத்துகளை வெளியிட்டார்.

இந்த நிகழ்வு சமூக ஒற்றுமையையும், சேவை மனப்பான்மையையும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.