மக்களது வரிப்பணம் மக்களுக்கே சென்றடைகின்றது. களவு மோசடிகளுக்கும் இடமில்லை



 


வி.சுகிர்தகுமார்         


 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடான 4 கோடி நிதி ஒதுக்கீட்டில் திருக்கோவில் காஞ்சிரன்குடா பிரதேசத்தில் அமையவுள்ள கால்நடை உற்பத்தி பயிற்சி நிலையத்தின் தங்குமிட இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.சுல்பிகார் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ணசேகர கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கிழக்கு விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி மற்றும் உதவிப்பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நதீர் விடய நிபுணர் வைத்தியர் எஸ்.டி.எம்.மாஹிர் பொறியியலாளர் பி.அச்சுதன் திட்டமிடலுக்கான பிரதி பணிப்பாளர் ஜி.சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆசியுரையினை இந்து இஸ்லாமிய மதத்தலைவர்கள் வழங்கியதுடன் பூஜை வழிபாடுகளை இந்துமத குரு நடாத்தி வைத்தார்.
இதன் பின்னராக கால்நடை பயிற்சி நிலையத்தின் தங்குமிட இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல்லினை ஆளுநர் உள்ளிட்ட அதிதிகளி;ல் நட்டு வைத்தனர்.
பின்னராக பெயர்ப்பலகையினை கிழக்கு மாகாண மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.சுல்பிகார் திரை நீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் கடந்த 70 வருடங்களாக நடைபெறாத மாற்றம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இடம்பெறுதாக கூறினார். மக்கள் வரிப்பணத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களின் பெருமளவான நிதி கடந்த காலத்தில் அரசியல்வாதிகளிடமும் அரச அதிகாரிகளிடமும் கொந்தராத்து செய்கின்றவர்களின் பைகளுக்குள் சென்றது.
ஆனால் இந்த அரசாங்கத்தின் சிறந்த நிதிக்கொள்கை காரணமாக முறையான அபிவிருத்திகள் இடம்பெறுகின்றது. மக்களது வரிப்பணம் மக்களுக்கே சென்றடைகின்றது. களவு மோசடிகளுக்கும் இடமில்லை என்றார்.