ரணவிரு நினைவுத் தூபியில் அனுமதி மறுப்பு; இருவர் கைது



 


நாட்டை அச்சுறுத்திய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையின்போது தாய்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த மற்றும் பங்களிப்பு வழங்கிய அனைத்து வீரமிக்க ரணவிருக்களையும் நினைவுகூர்ந்து, பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, சிவில் சமூக அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (18) பிற்பகல் 2:00 மணியளவில் அங்கு வருகை தந்திருந்தனர். 


இருப்பினும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் சென்று மலரஞ்சலி செலுத்த பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் அனுமதி வழங்கவில்லை.


இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், "இரண்டு நிமிடங்கள் தாருங்கள், கேட்டுவிட்டுச் சொல்கிறேன்" எனக் கூறி உயர் அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். அந்த அழைப்பின்போது, "இன்றைய தினம் எவரையும் ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம்" என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொலிஸாருக்கும் விமல் வீரவங்சவின் குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அவ்விடத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது.


இந்த பாதுகாப்புப் பிரிவினரின் தடைகளையும் தள்ளுமுள்ளுகளையும் மீறி விமல் வீரவங்ச நினைவுத் தூபியை நோக்கி முன்னேறினார். எனினும், தூபியின் பிரதான பகுதிக்குச் சென்று அஞ்சலி செலுத்த பொலிஸார் இடமளிக்காததால், அவர் அதற்கு அருகாமையிலுள்ள தரையில் மலர்களை வைத்து தனது அஞ்சலியைச் செலுத்தினார். 


இந்த தள்ளுமுள்ளுப் போராட்டத்தின்போது விமல் வீரவங்ச நிலத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இச்சம்பவத்தின்போது அங்கு நின்ற இருவரை பொலிஸார் கைதுசெய்து, அதில் ஒருவருக்கு விலங்கிட்டு பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிச் செல்ல முயன்றனர். இதன்போது உடனடியாக தலையிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, கைதுசெய்யப்பட்டவர்களுடன் தானும் பொலிஸ் ஜீப் வண்டியில் ஏறிக்கொண்டார்.


விமல் வீரவங்சவின் இந்த அதிரடித் தலையீட்டை அடுத்து, கைதுசெய்யப்பட்ட இருவரும் பொலிஸாரால் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.


(ஞான பிரசாந்தன்)