நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பகுதியில் இரண்டாவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த மனிதநேய நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
Myown Education Aid சமூக சேவை பிரிவும் United Power House அமைப்பும் முழுமையான அனுசரணையளித்ததுடன், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து இந்த முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வு இன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் வளாகத்தில் நடைபெற்றது. Myown Education Aid சமூக சேவை அமைப்பின் தலைவர் ரிஸ்லி முஸ்தபா முகாமைத் தொடக்கி வைத்தார்.
ஆரோக்கியமான இரத்ததானிகள் இதில் பெருமளவில் கலந்து கொண்டு, உயிர்களை காப்பாற்றும் உயரிய பணியில் தங்கள் பங்களிப்பை வழங்கினர். ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்ததானம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவிக்கையில், “ஒவ்வொரு இரத்ததானமும் ஒரு உயிரைக் காப்பாற்றும் சக்தி கொண்டது. சமூக ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் வலுப்படுத்தும் வகையில் அனைவரும் எதிர்கால இரத்ததான முகாம்களிலும் பங்கேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், “ஒரு உயிரைக் காப்பது மனிதகுலம் முழுவதையும் காப்பதற்கு சமம்” என்ற இஸ்லாமிய போதனையை நினைவுகூர்ந்து, மனிதநேயத்தின் உயர்ந்த நோக்கில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment