மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து தங்க ஆபரணங்கள் என வங்கியில் அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை நேற்று (4) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வவுணதீவுப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே 9 மாதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து ஆபரணங்களை தயாரிக்கும் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் போலி தங்க ஆபரணங்களை பெண் ஒருவர் அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் குறித்த தங்க ஆபரணம் போலியானது என சோதனையில் வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்க ஆபரணங்களை அடகு வைத்த வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கைதுசெய்து விசாரணையில் போலி தங்க ஆபரணங்களை அவரது கணவர் வடிவமைத்து வருவதாக தெரியவந்துள்ளது
இதனையடுத்து குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வந்ததுடன் வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது இந்த நிலையில் தப்பி ஓடி தலைமறைவாகி வந்த போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து வருபவரை பொலிஸார் தேடி வந்துள்ளனர்
இந்நிலையில் தலைமறைவாக இருந்த குறித்த நபர் சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து நேற்று மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க தலைமையில் விக்னேஷ் உட்பட்ட குழுவினர் நேற்று குறித்த மதுபானம் கடையை முற்றுகையிட்டு கைதுசெய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(கனகராஜா சரவணன்)


Post a Comment
Post a Comment