நீதித்துறை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார் சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம்"
நூருல் ஹுதா உமர்
சட்டத் துறையில் தனது கல்வி மற்றும் தொழில்முறை அர்ப்பணிப்பின் மூலம் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்து வந்த சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம் அவர்கள், அண்மையில் நீதித்துறை அதிகாரி (Magistrate) பதவிக்குத் தெரிவாகியுள்ளார்.
கௌரவ எம்.என். முஹம்மது ஹிஷாம் அவர்கள், எம்.எல்.எம். நசீர் மற்றும் சித்தி மர்லியா ஆகியோரின் புதல்வராவார். இவர் மாவனல்லை தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராக இருந்து தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
சட்டத் துறையில் உயர்ந்த இலக்குடன் பயணித்த அவர், 2017 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து வழக்கறிஞராகத் தகுதி பெற்றார். அதன் பின்னர் மாவனல்லை, கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களிலும் வழக்கறிஞராகப் பணியாற்றி பின்னர் சம்மாந்துறை, அம்பாறை பிரதேசங்களிலும் பணியாற்றி சட்டத் துறையில் பெறுமதிமிக்க அனுபவங்களைப் பெற்றார்.
தற்போது சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்த அவர், தனது தொழில்முறைப் பணிகளுடன் கல்விப் பயணத்தையும் தொடர்ந்தார். அதன் பயனாக, ஐக்கிய இராச்சியத்தின் Buckinghamshire New University பல்கலைக்கழகத்தில் சட்டமுதுமானி (LL.M.) பட்டத்தைப் பெற்று தனது கல்வித் தகைமையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இவர் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புலமை கொண்டவராவார்
இவர் சம்மாந்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி திருமதி யூ.எல். ஷிபானா அவர்களைத் திருமணம் செய்து கொண்டு, சம்மாந்துறை சட்டத்தரணி சங்கத்தில் தனது சட்டப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். தற்போது நீதித்துறை அதிகாரி (Magistrate) பதவிக்குத் தெரிவாகியுள்ளமை அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி, கல்விச் சாதனை மற்றும் தொழில்முறை நேர்மைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
அவரது இந்த மகத்தான சாதனையை முன்னிட்டு சட்டத்தரணிகள், நீதித்துறை சார்ந்தவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திலிந்து நீதித்துறை அதிகாரியாக தெரிவான இரண்டாமவர் எனும் பெருமையை இவர் பெறுகிறார்.
சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்தச் சாதனை, அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் பயணிக்கும் போது உயரிய இலக்குகளை அடைய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment