ஆலையடிவேம்பில், இராணுவத்தினரின் வசமிருந்த MPCS 2 ஏக்கர் காணி விடுவிப்பு



 

வி.சுகிர்தகுமார்          


 15 வருடங்களின் பின்னர் அக்கரைப்பற்று 241 ஆம் படைப்பிரிவு இராணுவத்தினரின் வசமிருந்த ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு உரிமையான அரிசி குற்றும் ஆலை அமைந்திருந்த சுமார் 2 ஏக்கர் காணி இன்று (22)விடுவிக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்க அவர்களின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இக்காணி விடுவிக்கப்பட்டது.
கடந்த 15 வருடங்களாக இக்காணியை வழங்கக்கோரி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் நடவடிக்கை எடுத்து வந்தது. இருப்பினும் அச்செயற்பாடு வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஊடாக அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இது தொடர்பான மகஜர்கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து இக்காணி விடுவிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் நா.ஏரம்பமூர்த்தி தெரிவித்தார்.
காணி விடுவிப்பு கடித ஒப்பந்தமானது இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன் விடுவிப்பு ஒப்பந்தத்தில் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் டபிள்யு இ.டி.எச்.ஆர்.கே. வெலிக்கண்ணா மற்றும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி இராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன் கேர்ணல் திலீப ஆகியோர் கையொப்பமிட்டனர்.
தொடர்ந்து காணி விடுவிப்பிற்கான ஒப்பந்த கடித்தினை பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தன் பிற்பாடு களவிஜயமொன்றினை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டனர்.
இதேநேரம் இக்காணி விடுவிப்பிற்காக உத்தரவிட்ட ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அக்கரைப்பற்று 241 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உள்ளிட்டோருக்கும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
காணி கையளிப்பு நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச்சங்க நிருவாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.