ஆலையடிவேம்பில், இவ்வாண்டில் 100 இற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் பணி



 


ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்            

 ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வாண்டில் 100 இற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் பணி அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாகவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள 20 இலட்சம் பெறுமதியான 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும்; இன்றும் (17) நடைபெற்றது.
அலிக்கம்பை கவடாப்பிட்டி கண்ணகிகிராமம் வாச்சிக்குடா உள்ளிட்ட பிரிவுகளில் இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் 83 வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் ரதீசன் வீடமைப்பு தொழிநுட்ப உத்தியோகத்தர் கு.ததீஸ்வரன் பிரதேச சபை உறுப்பினர் இராஜேந்திரன் பிரஜா சக்தி தலைவர் ஜெபநேசன்; அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.