மொராக்கோவில் இருந்து கடலில் நீந்தி ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயினுக்குள் நுழைந்ததால் ஐரோப்பா அதிர்ச்சி



 



கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவிற்குள் நுழைந்துள்ளதாக அந்தப் பிராந்தியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திடீர் வருகை தங்களுக்கு சுமையாக இருப்பதாக ஜுவான் ஜெசஸ் விவாஸ் கூறினார். ஸ்பெயின் அரசாங்கம் இதில் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, ஸ்பெயினின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா வெள்ளிக்கிழமை அங்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை புலம்பெயர்ந்தோர் நீந்தியும், காற்றடைத்த வளையங்கள் மற்றும் இதர மிதக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தியும் செயுட்டாவை நோக்கி நீந்தி செல்வதை வீடியோ காட்சிகள் காட்டின. அதே நேரத்தில் மற்றவர்கள் எல்லை வேலியிலுள்ள ஒரு கதவு வழியாக ஓடி வந்தனர்.

மொராக்கோவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள செயுட்டா, ஸ்பெயினின் முக்கிய நிலப்பரப்பிலிருந்து ஜிப்ரால்டர் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு முக்கிய மையப்புள்ளியாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.