நூருல் ஹுதா உமர்
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார தாதிய சகோதரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், பிராந்திய உளநலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என். அருந்திரன் இந்த செயலமர்வை ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்வில் உளநல வைத்திய நிபுணர்களான டொக்டர் வீ. சிந்துஜன் மற்றும் டொக்டர் எம்.ஜே. நௌபல் ஆகியோர் வளவாளர்களாகப் பங்கேற்று, மனநல மருத்துவத்தில் பின்பற்றப்படும் நவீன சிகிச்சை அணுகுமுறைகள், சமூக மட்டத்தில் தாதியர்களின் பொறுப்புகள் மற்றும் நோயாளிகளுக்கான ஒருங்கிணைந்த பராமரிப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
பயிற்சி அமர்வில், மனநலப் பாதிப்புக்குள்ளான நபர்களை சமூக மட்டத்தில் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வழிமுறைகள், உளவியல் மற்றும் மருந்தியல் அடிப்படையிலான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடைமுறைகள், மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளை உரிய நிலையங்களுக்கு பரிந்துரைக்கும் நடைமுறைகள், சிகிச்சை பெறும் நோயாளிகளின் முன்னேற்றத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் மற்றும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், மனநலம் தொடர்பான சமூகக் களங்கத்தை நீக்கி, மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணியமான சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைக்கும் பணியிலும் தாதியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வளவாளர்கள் வலியுறுத்தினர்.
இப்பயிற்சி செயலமர்வு, கல்முனை பிராந்தியத்தில் மனநல சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, சமூக மட்டத்தில் மனநல நோயாளிகளுக்கான பராமரிப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.


Post a Comment
Post a Comment