நூருல் ஹுதா உமர்
உகந்தமலை ஶ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆலய வளாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சுத்தப்படுத்தும் விசேட சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமை தாங்கினார். அவருடன் முன்னாள் தவிசாளரும் தற்போதைய கௌரவ உறுப்பினருமான வை. கோபிகாந்த், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இணைந்து சிரமதானப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
சிரமதானத்தின் போது ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தேங்கியிருந்த கழிவுகள் அகற்றப்பட்டதுடன், புதர்கள் வெட்டப்பட்டு, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கை, பொதுமக்கள் அதிகளவில் தரிசனம் செய்யும் வழிபாட்டுத் தலத்தின் தூய்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதோடு, மதஸ்தலங்களைப் பாதுகாப்பது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என்ற விழிப்புணர்வையும் வலுப்படுத்துவதாக அமைந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர் எஸ். பாஸ்கரன், பொதுமக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பிரதேச சபை தொடர்ச்சியாக சேவையாற்றி வருவதாகவும், மத, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பொதுநலப் பணிகளுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஆலய பரிபாலன சபையினர், தங்களது கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து சிரமதானப் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்த காரைதீவு பிரதேச சபை நிர்வாகம், தவிசாளர், முன்னாள் தவிசாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment