வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்!



 


காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் இன்று (10) காலை வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 


குறித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் நிலவுவதால், மஸ்கெலியா ஓயா ஆற்றின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, மக்களை அவதானத்துடன் இருக்குமாறு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இதேவேளை, காசல்ரீ நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 1.2 அடி வரை எட்டியுள்ளதுடன், அந்நீர்த்தேக்கத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 25 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 


மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 3.4 அடி வரை எட்டியுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் 29 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.