தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சியில் இலங்கை முதல் இடத்தில்!




 ( வி.ரி. சகாதேவராஜா)

பாரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுகின்ற நாடுகள் வரிசையில் தெற்காசியாவில் இலங்கை முதல் இடத்தை வகிக்கின்றது.

இவ்வாறு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா காரைதீவில் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம்(24) திங்கள் பிற்பகல் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் ஏற்பாட்டில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 20 மாதங்களாக ஜனாதிபதி அனுற தலைமையிலான எமது அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக மீட்டு எடுத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். என்றும் கூறினார்.

கூட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.

அங்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கவி.கோடீஸ்வரன், எம் எஸ். உதுமாலெப்பை, தவிசாளர் சு.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.
இங்கு பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில்  ஆயுர்வேத வைத்திய கூடம் ஒன்று ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. எனவே நாங்கள் சமாதானத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.பிரணவரூபன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.இராஜகுலேந்திரன் மற்றும் கணக்காளர் திருமதி ஹஸ்மியா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச சபை செயலாளர் ,பிரதேசசபை உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள் , எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திகள், கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆராயப்பட்டதுடன் காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்வி ,சுகாதாரம், மையவாடி , கல்லணை, குடிநீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு, மைதானம் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.