சிறைச்சாலைகளில் நிலவும் பதற்றங்கள் குறித்து கலந்துரையாடிய ஜனாதிபதி




 நாட்டின் சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமைகள் தொடர்பிலும், சிறைச்சாலை கைதிகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்யும் சிறப்புக் கூட்டம் , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


நாட்டின் 33 சிறைகளில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.


அத்துடன், கைதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும், அவசர நிலையொன்றின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் ஆராய்வதற்காகக் கூட்டுப் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


இதற்கமைய, 33 சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் முப்படைகள் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறையொன்று எதிர்வரும் வாரத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைச்சாலை கைதிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.


நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருடன், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.