சாய்ந்தமருது–மாளிகைக்காடு பிரதேச பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் 2026ஆம் ஆண்டுக்கான ஸகாத் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு (13.09.2026) சாய்ந்தமருது–முஹையதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
ரூ.96,64,900 நிதி ஒதுக்கீட்டில் 148 பயனாளிகளை இலக்காகக் கொண்டு குடும்ப வாழ்வாதாரம், சுயதொழில், சிறு வர்த்தகம், தொழிற்பயிற்சி மற்றும் புதிய முஸ்லிம்களுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள் வழங்கப்படுகின்றன.
பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தைபா அரபுக் கல்லூரி பணிப்பாளர் மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா, பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் பிரதித் தலைவர் மௌலவி ஐ.எல்.எம். ரஃபி (ஹிழ்ரி), காழி நீதிபதி பொறியியலாளர் யூ.கே.எம். முஸாஜித் உள்ளிட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தலைவர் முபாறக், “இது வெறுமனே பணத்தைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு அல்ல; தகுதியுடையவர்களின் உரிமையான ஸகாத் நிதியை அமானத்துடன் உரியவர்களிடம் சேர்க்கும் பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.
ஸகாத் பெறுபவர்கள் எதிர்காலத்தில் தன்னிறைவு அடைந்து, “இன்று ஸகாத் பெறுபவர் நாளை ஸகாத் வழங்குபவராக மாற வேண்டும்” என்பதே திட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் தேவையுடையவர்களை அடையாளம் காண்பதற்காக நிர்வாகக் குழுவினர் அவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்த பின்னரே உதவிகள் திட்டமிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸகாத் நிதியின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பயனாளிகளின் கண்ணியத்தைப் பாதுகாத்தல் மற்றும் உதவிகளை வாழ்வாதார மேம்பாட்டுடன் இணைத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சாய்ந்தமருது–மாளிகைக்காடு பைத்துஸ் ஸகாத் நிதியை எதிர்காலத்தில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கான முன்னுதாரணமான ஸகாத் நிர்வாக அமைப்பாக உருவாக்குவதே தமது நோக்கம் எனவும் அல் ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment