புதிய விடுதித் திட்டத்தின் ஊடாக 16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2025, 2026ஆம் ஆண்டுகளிலும் அதற்குப் பின்னரும் 55 புதிய பல்கலைக்கழக விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதன் மூலம் சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.
விடுதிப் புனரமைப்பு மற்றும் புதிய விடுதிகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் உள்நாட்டு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டில் புதிய விடுதிகளை நிர்மாணிப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாவும், விடுதிப் புனரமைப்புக்காக 400 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒட்டுமொத்த விடுதிக் கொள்கையொன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயாரித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதிகளைப் பெற முடியாத மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள், பாதுகாப்பு, சுகாதாரம், நியாயமான கட்டணம் மற்றும் மாணவர் நலன்புரி உள்ளிட்ட விடயங்களும் புதிய கொள்கையில் உள்ளடக்கப்படவுள்ளன.
குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களின் விடுதி தேவைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதிகள் அமைப்பதில் நகர்ப்புறங்களிலிருந்து தொலைவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா, கிளிநொச்சி, தென்கிழக்கு, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் சபரகமுவ பல்கலைக்கழகங்கள் இதற்காக முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், அரச–தனியார் பங்களிப்பின் ஊடாக மேலதிக மாணவர் விடுதிகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


Post a Comment
Post a Comment