#Rep/MathAnpan
காத்தான்குடி சிகை அலங்கார நிலையங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் நகர முதல்வர் தலைமையில் முக்கிய தீர்மானங்கள்.
காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் சிகை அலங்கார நிலைய (சலூன்) உரிமையாளர்களுடனான விசேட கலந்தரையாடல் ஒன்று இன்று நகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர் (JP, UM) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்தரையாடலில் பொதுமக்களின் நலன், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் சுகாதார நடைமுறைகளை முன்னிலைப்படுத்தி பின்வரும் முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. எதிர்வரும் வாரங்கள் முதல் காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து சிகை அலங்கார நிலையங்களும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் முழுமையாக மூடப்பட வேண்டும்.
2. சேவைக் கட்டணங்கள் தொடர்பான விலை நிர்ணயத்தை சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூடித் தீர்மானிக்க வேண்டும். அத்தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நகரசபையின் உத்தியோகபூர்வ அனுமதிக்காகச் சமர்ப்பித்து, அனுமதியைப் பெற்ற பின்னர் பொதுமக்களின் பார்வைக்கு நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
3. பாடசாலை மாணவர்களுக்குப் பொருத்தமற்ற நாகரிகக் கோளாறான சிகை அலங்காரங்களைச் செய்யாது, முறையான ஒழுங்குவிதிகளைப் பேண வேண்டும். இதனை மீறி மாணவர்களுக்கு ஒழுங்கீனமான முறையில் சிகை அலங்காரம் செய்யும் நிலையங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவற்றின் தொழில் அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்படும்.
4. அனைத்து சலூன்களும் முழுமையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, சுத்தமாகப் பேணப்பட வேண்டும். அத்துடன், அங்கிருந்து வெளியேறும் திண்மக் கழிவுகளை முறையாக அகற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதில் அலட்சியம் காட்டுவோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இக்கலந்துரையாடலில் காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment