அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பகுதியில் விசேட கடற்கரைத் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் ...!



l ( எம்.என்.எம்.அப்ராஸ்)

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரையோரப் பகுதியில் நேற்று (22) விசேட கடற்கரைத் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


கடற்கரைச் சூழலைப் பாதுகாத்தல், கடற்கரை மாசுபாட்டைக் குறைத்தல், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இத்தூய்மைப்படுத்தல் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.


கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) அம்பாறை மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரி கே.சிவகுமார் மற்றும் உதவி கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரி எச்.கே.எம். ஜெம்ஸீத் ஹஸன்ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இந்நிகழ்வில்  இராணுவத்தினரும்,  கடற்படையினரும்,சிவில் பாதுகாப்புப் படையினர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆலையடிவேம்பு பிரதேச சபை பணியாளர்கள், சமுர்த்தி பயனாளர் குழுத் தலைவர் மற்றும் பிரஜாஷக்தி உறுப்பினர்களின் தலைவர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கடற்கரைத் தூய்மைப்படுத்தல் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தமது பங்களிப்பை வழங்கினர்.

“தூய்மையான கடற்கரை – பாதுகாக்கப்பட்ட கடல் – வளமான எதிர்காலம்” என்ற நோக்குடன், தற்போதைய கடற்கரைச் சூழலைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பேணுவதுடன், எதிர்கால சந்ததியினருக்காக ஆரோக்கியமானதும் அழகானதுமான கடல் மற்றும் கடற்கரைச் சூழலைப் பாதுகாத்து வழங்குவதே இவ்வாறான செயற்றிட்டங்களின் பிரதான நோக்கமாகும்.