மக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் விரைவான சேவையை வழங்குவதற்காக, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பிரதேச செயலகம் வரை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் உயர் செயல்திறனை வெளிப்படுத்திய வடக்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் (26) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையே, ஜனாதிபதி நிதியத்திற்கான விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் அவற்றுக்கு விரைவாகப் பதிலளித்தல் ஆகியவற்றின் செயல்திறனுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பிரதேச செயலகங்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்ட 15 பிரதேச செயலகங்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டது.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாம் இடத்தை நல்லூர் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை சாவகச்சேரி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் இடத்தை கிளிநொச்சி பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை பூநகரி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது.
மன்னார் மாவட்டத்தில் முதல் இடத்தை நானாட்டான் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை மன்னார் நகர் பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை மாந்தை மேற்கு பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் இடத்தை கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது.
வவுனியா மாவட்டத்தில் முதல் இடத்தை வவுனியா பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை வவுனியா வடக்கு பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகமும் வென்றெடுத்தது.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்லத்தம்பி திலகநாதன், எம்.ஜெகதீஸ்வரன், மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே மற்றும் மாவட்டச் செயலாளர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-09-27


Post a Comment
Post a Comment