புல்மோட்டையின் குறைகள் தீர்வது எப்போது? தீர்ப்பது யார்?



 


புல்மோட்டை தூரத்தில் மட்டுமல்ல சேவைகளிலும் பின்தள்ளப்பட்ட பிரதேசமாக சீல் குத்தப்பட்டுள்ளது. புல்மோட்டையிலிருந்து திருகோணமலை சுமார் 60 கிலோமீட்டர். சென்று வர வேண்டுமென்றால் சுமார் 120 கிலோமீட்டர் பயணம்.


ஆனால் பிரச்சினை தூரம் மட்டுமல்ல. ஒரு பொதுமகன் ஓர் அர‌ச திணைக்களம் அல்லது நிறுவனத்தின் சேவைக்காக காலையில் புல்மோட்டையிலிருந்து திருகோணமலைக்குச் சென்றால் அச் சேவையைப் பெற்றுக்கொண்டோ அல்லது பெறாமலோ மீண்டும் புல்மோட்டையை அடையும் நேரத்தில் இரவாகிவிடும் நிலை உள்ளது.


ஒரு நாளில் முடிந்திருக்க வேண்டிய ஒரு அரச சேவையானது ஒரு குடும்பத்தின் முழு நாளையும் சில நேரங்களில் அதற்கும் மேலான நேரத்தையும் விழுங்குகிறது.


கல்வி, சுகாதாரம், மின்சாரம், விவசாயம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் சேவைகள் புல்மோட்டையில் இன்னும் அதன் முழுமையான அடைவையும் திறனையும் எட்டாததற்கு எமது பிரதேசத்தின் புவியியல் தூரமும் நிருவாக மையங்களிலிருந்து காணப்படும் இடைவிலகலும் முக்கிய காரணிகளாக உள்ளன என்பதை நான் அறிகின்றேன்.


இலங்கைத் தாயின் வரைபடத்தில் ஒரு மூலையில் இருப்பது எமது குற்றமல்ல. ஆனால் அந்த மூலையில் இருப்பதற்காக அரச சேவைகளின் தரத்திலும் வாய்ப்புகளிலும் வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் ஒரு சமூகத்தை மூலையில் தள்ளிவைப்பது நியாயமுமல்ல.


எமது பிரதேசத்திற்கு வேண்டியது இரக்கம் அல்ல. சமமான அரச சேவையும் சமமான வாய்ப்பும் கவனமுமாகும். கடைசிக் குழந்தைக்கு எஞ்சிய சோற்றை வழங்குவது போன்று அல்ல. அக் குழந்தைக்கும் சமமாகப் பரிமாறப்படும் உணவைப் போல உரிமையுடன் வழங்கப்படும் சேவைகளே ஒரு பிரதேசத்தின் உண்மையான வளர்ச்சியின் அடையாளம்.


அனீஸ் அலி முஹம்மத் 

17.09.2026