பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்குக் கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்பு வீரர்களுக்குரிய பெறுமதியான தீயணைப்பு அங்கிகள் மற்றும் ஒரு தொகுதி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (25) கொழும்பு மாநகர சபையில், கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பஸ்தசார் மற்றும் கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய இரு மாநகர சபைகளினதும் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை என்பவற்றின் தீயணைப்புச் சேவைகளை மேலும் பலப்படுத்தி மேம்படுத்தும் பொருட்டு, ஆணையாளர் என்.எம். நௌபீஸ் கொழும்பு மாநகர சபையிடம் விடுத்த விசேட வேண்டுகோளை ஏற்று மேயர் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார்.
கொரிய அரசாங்கத்தினால் கொழும்பு மாநகர சபைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தீயணைப்பு அங்கிகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களிலிருந்தே ஒரு தொகுதி கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளுக்கு இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இக் காத்திரமான உதவிக்காகக் கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்குக் கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் இந்நிகழ்வின் போது தமது பொன்னான நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டார்.


Post a Comment
Post a Comment