நூருல் ஹுதா உமர்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பரந்த துறையாக காணப்படுவதால், அதனை முழுமையாகக் கற்றுக்கொள்வதைவிட ஒவ்வொருவரும் தமது தொழில் மற்றும் துறைசார் தேவைகளுக்கு பொருத்தமான AI கருவிகளை அடையாளம் கண்டு கற்றுக்கொள்வது அவசியம் என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி. எம். வை. அரபாத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் கல்வி மற்றும் தொழில்துறை மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாணவர்கள் எதிர்கால தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவு தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. AI தொழில்நுட்பம் மிகவும் பரந்த பரப்பைக் கொண்டுள்ள நிலையில், அதனை முழுமையாகக் கற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம்.
எனவே, ஊடகவியலாளர்கள் தமது துறைக்கு மிகவும் பொருத்தமான AI கருவிகளை அடையாளம் கண்டு, அவற்றை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதன் மூலம் தமது தொழில்திறன், வேலைவாய்ப்பு மற்றும் துறைசார் வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ள முடியும் என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி. எம். வை. அரபாத் சுட்டிக்காட்டினார்.
மேலும், AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் உண்மையான புகைப்படங்கள், காணொளிகளையும் வேறுபடுத்தி அறியும் திறன் ஊடகவியலாளர்களுக்கு அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
AI காலத்தில் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி, பொறுப்புடனும் நேர்மையுடனும் ஊடகப் பணியை முன்னெடுப்பது ஊடகவியலாளர்களின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
.jpg)

Post a Comment
Post a Comment