நுவரெலியா மாவட்டத்தில் 16 கிராமிய பாதைகள் புனரமைப்பு



(க.கிஷாந்தன்)

நல்லாட்சி அரசாங்கத்தில் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மலையகத்தில் 16 கிராம வீதிகள் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் அவர்களின் அமைச்சின் ஊடாக இந்த கிராம வீதிகள் புனரமைக்கப்படவுள்ள வேலையில் இதன் முதற்கட்ட பணி 06.12.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் 3 கிராம வீதிகளுக்கு சுமார் 900 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு வேலைக்கென அடிக்கல் நாட்டு விழா மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்  திகாம்பரம் அவர்களின் தலைமையில் 06.10.2015 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம், சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸதர்கள் கலந்து கொண்டனர்.

06.12.2015 அன்று ஆரம்பிக்கப்பட்ட வீதி புனரமைப்பு பணிக்கு நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட செனன் வெலிஓயா தோட்ட பிரவுக்கு 9 கிலோ மீற்றர்கான வீதி புனரமைக்க 320 மில்லியன் ரூபாவும், தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் கல்கந்த தோட்டபாதை 4 கிலோமீற்றர்களை புனரமைக்க 216 மில்லியனும், நானுஓயா உடரதல்ல வரையிலான 6 கிலோ மீற்றர் பாதையை சீர்திருத்தத்துக்கு 353 மில்லியனும் நிதி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்பகுதி மக்களின் தேர்தல் காலத்தில் வழியுறுத்தியதற்கமைய இப்பாதை சீர்திருத்தங்கள் தேர்தல் வாக்குறுதிக்கமைய நிறைவேற்றப்பட்டு வருகின்றது.