நவம்பர் 13 இல் பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து அந்நாட்டின் அரச படையினர் மேற்கொண்டு வரும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸிலுள்ள முஸ்லிம்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய பாதுகாப்புக் கெடுபிடிகளை அமுல்நடத்தியுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டோர் அறபு பூர்வீகத்தைக் கொண்ட ஐரோப்பிய முஸ்லிம் இளைஞர்கள் என்பதால் பொது நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கெதிரான பாகுபாடு தலைதூக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. 2ம் உலக யுத்தத்திற்குப் பின்னர் பிரான்ஸில் நடந்த மிகப் பெரிய தாக்குதல் இதுவே எனவும், இதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ஹொலெண்டே தெரிவித்ததை அடுத்து பள்ளிவாயல்கள், இஸ்லாமிய தஃவா நிறுவனங்கள் என்பன தீவிர அரச கண்காணிப்பின் கீழ்வந்துள்ளன.
பிரான்ஸில் 50 இலட்சம் முஸ் லிம்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் பெயர்களோடு தொழில் தேடுவதும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைப் பெறுவதும் இதன் பின்னர் கடினமாக இருக் கும் என அந்நாட்டு முஸ்லிம்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸில் இதுவரை நிலவிவந்த பன்மைச் சமூக கட்டமைப்பில் இத்தாக்குதல் எதிரிடையான தாக்கத்தை உருவாக்கியுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.
