'வடக்கில் தங்கிவாழும் நிலையில் 42 ஆயிரம் பெண்-தலைமை குடும்பங்கள்'




42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ளனர்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றிருப்பதனால் மற்றவர்களில் தங்கி வாழ வேண்டிய நிலையில் சமூக சீரழிவுக்கு ஆளாகக் கூடிய ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக வடமாகாண சுகாதாரத்துறை மற்றும் பெண்கள், சிறார்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் கூறினார்.
வடக்கு மாகாணசபையின் பெண்கள்,சிறார்கள் விவகாரங்களுக்கான திணைக்களம் சுகாதாரத்துறை அமைச்சின் கீழ் வந்துள்ள போதிலும், அதற்குரிய ஆளணிகள் வழங்கப்படவில்லை. அதற்கான நிதியொதுக்கீடும் செய்யப்படவில்லை.
இதனால் அந்தப் பெண்களின் வாழ்க்கைக்கு வலுவூட்டுவதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மத்திய அரசாங்கத்தில் பெண்கள் விவகாரங்களுக்கென தனியான அமைச்சு ஒன்று செயற்படுகின்ற போதிலும், அந்த அமைச்சு வடமாகாண சபையுடனோ அல்லது மாகாணசபையின் பெண்கள் சிறார் விவகாரங்களுக்கான திணைக்களத்துடனோ இணைந்து செயற்படுவதில்லை என்று டாக்டர் சத்தியலிங்கம் கூறினார்.
இருப்பினும், அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கான கூட்டத்தில் மாகாணசபைகளும் மத்திய அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனையடுத்து இந்த நிலைமையில் இப்போது சிறிது முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கின்றது என்றும் வடமாகாண சுகாதாரத்துறை மற்றும் பெண்கள் விவகாரங்களுககான அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் கூறினார்.
இந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி