
நாட்டிலுள்ள எட்டு அஞ்சல் பயிற்சிக் கல்லூரிகளில் உள்ள அஞ்சல் பயிற்சிப; போதனாசிரியர்களுக்கு பயிற்சி அபிவிருத்தி நிகழ்ச்சி பற்றிய இரு நாள் செயலமர்வு செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவகத்தில் ஆரம்பமானதாக அஞ்சற் திணைக்கள பயிற்சிப் பணிப்பாளர் ரவீந்திர குணரத்ன தெரிவித்தார்.
உலகத் தரம் வாய்ந்ததாக இலங்கையின் தபாலங்களை மாற்றும் எண்ணக்கருவுடன் கூடிய இந்தப் பயிற்சி நெறியை வழங்குவதற்கு இந்தியாவின் முன்னாள் தபால் மா அதிபதி ஜோஹ்ன் சாமுவேல் வளவாளராக வரவழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அஞ்சல் மா அதிபர் டி.எல்.பி. றோஹன அபேரட்ன தெரிவித்தார்.
இலங்கையில் கொழும்பு,காலி,கண்டி யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,பொல்கஹவெல.தம்புத்தேகம மற்றும் பதுளை ஆகிய எட்டு நகரங்களில் அமைந்துள்ள அஞ்சல் பயிற்சிக் கல்லூரிகளில் போதனாசியர்களாகக் கடமையாற்றும் சுமார் 24 பேர் இந்த பயிற்சி அபிவிருத்தி நிகழ்ச்சிச் செயலமர்வில் பங்குபற்றியுள்ளனர்.
பயிற்சி நெறிகளின் ஆரம்ப நிகழ்வில் அஞ்சற் திணைக்கள பயிற்சிப் பணிப்பாளர் ரவீந்திர குணரத்ன,கொழும்பு வெள்ளவத்தை அஞ்சற் பயிற்சிப் பாடசாலையின் பிரதம போதனாசிரியர் ஏ.எல். அங்கம்மான பிரதித் தலைமை போதனாசிரியர் டி. சஜித்குமார. மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சி பிரதம போதனாசிரியர் பி. நரேந்திரன் போதனாசிரியர்களான கே. பாத்திமா ஹஸ்னா,சிவானந்தி தேவதாஸ், கண்டி அஞ்சற் பயிற்சி பிரதம போதனாசிரியர் ரணதுங்க,பொல்கஹவெல அஞ்சற் பயிற்சி பிரதம போதனாசிரியர் சந்திரிகா உட்பட அஞ்சற் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பயிற்சியாளர்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி, பயிற்சியின் முக்கியத்துவம்,கற்றுக் கொள்ளலும் அபிவிருத்தியும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்களில் இந்தப் பயிற்சிகள் இடம்பெறுகின்றன.

