உலகளவில் கச்சா எண்ணெயின் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.
தற்போது ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 36 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விழுந்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்ததைவிட இந்த விலை 20 சதவீதம் குறைவு. அப்போது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அமைப்பான ஒபெக் நிறுவனம் உற்பத்தியை குறைப்பதற்கு எதிரான முடிவை எடுத்தனர்.
பல நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க மறுத்துள்ளன.
எண்ணெய் விநியோகத் தேவை குறைந்த போதிலும், உற்பத்தியை குறைக்க அவர்கள் இணங்கவில்லை.
எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இதன் மூலம் பலனடைந்துள்ளன என்றாலும், நைஜீரியா, வெனிசுவேலா மற்றும் வளைகுடா நாடுகளில் இதனால் உள்நாட்டு வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளன.
எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இது சாதகமாக அமையும்
சரவதேச அளவில் எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் சர்வதேச சந்தைகளை சென்றடையும் நிலையிலும், இரான் மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து, பல நாடுகள் அங்கிருந்து மேலும் இறக்குமதிகளை செய்யும் என்பதால் விலை வீழ்ச்சியை தடுக்க சிறிதளவே வாய்ப்புகள் உள்ளன என அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

