சிரியா: ரஷ்யாவின் விமானத் தாக்குதல்களில் 'பொதுமக்கள் பலி'- அம்னெஸ்டி






சிரியாவில் பொதுமக்கள் உயிரிழப்புகளை சந்தித்துள்ள ஆறு இடங்களை குறிப்பிட்டுக் காட்டியுள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அந்த ஒவ்வொரு இடத்திலும் அருகில் இராணுவ ரீதியான இலக்குகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்று கூறுகின்றது.
நேரில் பார்த்தவர்கள், மருத்துவர்கள் மற்றும் மனித உரிமை குழுக்களின் தகவல்களின்படி, வீடுகளும் மருத்துவமனை ஒன்றும் சந்தையொன்றும் பள்ளிவாசல் ஒன்றும் கூட வான் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
பெரும்பாலும், இந்தத் தாக்குதல்களின் நேரங்களும் இடங்களும், வான் தாக்குதல்கள் பற்றிய ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் தரவுகளோடு பொருந்திப் போகின்றன. ஆனால், ஐஎஸ் ஆயுதாரிகளையே இலக்குவைத்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
சிரியாவில் ஆயிரக்கணக்கான குண்டுகளை கொட்டியுள்ள ரஷ்யா, பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. பயங்கரவாதிகளை துல்லியமாக குறிவைத்து தாக்குவதாக கூறும் ரஷ்ய அதிகாரிகள், இப்படியாக முன்னர் வெளியான குற்றச்சாட்டுக்களை ரஷ்யாவுக்கு எதிரான மேற்குலகின் தகவல் போர் என்றுகூறி நிராகரித்திருந்தனர்.
ஆனால், தங்களுக்கு கிடைத்துள்ள வீடியோக்களை ஆராய்ந்துள்ள இந்தப் புதிய புலனாய்வு, மக்கள் குடியிருப்பு பகுதிகளில், வழிநடத்தப்படாத குண்டுகளும் கொத்துக் குண்டுகளும் போடப்பட்டுள்ளதாக கூறுகின்றது.
சிரியாவில் 'கண்மூடித்தனமாக, 'தேவைக்கு அதிகமாக' நடக்கும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அங்கு இதுவரை நடந்துள்ளவை பற்றி முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.