கட்டாரிலிருந்து திரும்பிய இளைஞனைக் காணவில்லை





(ஹுஸைன்)
கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்டாரிலிருந்து நாடு திரும்பிய இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு முறைப்பாடு செய்துள்ளனர்.
இது பற்றிய முறைப்பாடொன்று மட்டக்களப்பு வவுணதீவுப் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, மட்டக்களப்பு - புது மண்டபத்தடி, கன்னன்குடாவைச் சேர்ந்த நவரெட்ணம் குணராஜன் (வயது 22) என்பவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தொழில் வாய்ப்புப் பெற்று கட்டார் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
எனினும், அங்கு சென்றதும் சுகயீனம் ஏற்பட்டு வேலை செய்ய முடியாததால் கடந்த 13.12.2015 அன்று நாடு திரும்பியுள்ளார்.
அன்றைய தினம் நள்ளிரவு 12.40 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
எனினும், இவரை அழைத்து வரச்சென்ற தந்தை வெகுநேரமாகக் காத்திருந்தும் தனது மகன் வராததால் அங்குள்ள விமான நிலையப் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். அதேவேளை விமான நிலையத்திலுள்ள அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் தன்னுடைய மகன் வெளியேறிச் சென்றுள்ளதாக வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பின்னர் அவர் வசிக்கும் பிரதேசமான வவுணதீவுப் பொலிஸிலும் முறையிட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞனுடன் விமானத்தில் வந்திறங்கிய மொறட்டுவையைச் சேர்ந்த குணராஜனின் நண்பர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கி பரிசோதனைகள் முடிக்கும் வரை குணராஜன் தன்னுடன் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் குணராஜன் காணாமல் போய் விட்டதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து பெற்றோர் கவலையுடன் உள்ளார்கள். இவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்தவர்கள் 0779424185, 0772768735 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக் கொள்கின்றனர்.
கடந்த ஒக்ரோபர் இறுதி வாரத்தில் கட்டாருக்கு சுத்திகரிப்பாளர் தொழிலுக்காக சென்ற தன்னுடைய மகன் புத்தி சுவாதீனமாகியுள்ளதாகவும் அவர் திருப்ப அனுப்பப்படவுள்ளதாகவும் அவருடைய நண்பர் மூலம் அறிந்தேன் என்று தந்தை நவரெட்ணம் தெரிவித்தார்.