(எஸ்.ரி.ஜமால்டீன்)
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இரு குழுக்களுகிடையில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் மூன்று பேரை நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை (19) கைது செய்ததாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று (20) ஞாயிற்றக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் கே.சமீம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது பதில் நீதிபதி இருவரை எதிர்வரும் 23 ஆம் (23.12.2015) திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் மற்ற நபரை 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
ஆலையடிவேம்பு கோளாவில்- 1ஆம்பிரிவு வெள்ளப்பாதுகாப்பு வீதியில் கடந்த வியாழக்கிழமை (17) இரவு 7 மணியளவில் பெண் ஒருவர் தொடர்பாக இரு குழக்களுக் கிடையில் மோதல் இடம் பெற்றதாகவும் மோதலில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் காயமடைந்த மூவரையும் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
மோதலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வாள்,கத்தி,கோடாரி என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பிணையில் விடுவிக்கப்பட்டவரின் மகனும் மற்றய தரப்பை சேர்ந்த நபருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

