தெல்தொட்டையில் சட்டவிரோத காணி பகிர்வு நிறுத்தப்பட்டது




கண்டி - தெல்தோட்டை லிட்டில்வெலி தோட்டத்தில் முறையற்ற வகையில் இடம்பெற்றுவந்த காணி பகிர்வு நடவடிக்கை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் நேரடியாகச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளார். 

கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள லிட்டில்வெளி தோட்டத்தில் நகருக்கு அண்மையில் உள்ள காணிகளை தெல்தோட்டை பிரதேச செயலாளர் முறையற்ற வகையில் பகிர்ந்தளித்து வருவதாக தெரிவித்து லிட்டில்வெளி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இதுவிடயம் தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கும் கொண்டுவந்தனர். 

லிட்டில்வெளி தோட்டத்தில் வசிக்கும் 124 குடும்பத்தினர் வாழ்வதற்கு அடிப்படை வசதிகளற்ற 120 வருடங்கள் பழமையான லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். 

ஒரு லயன் அறையில் 3, 4 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இவர்களை கருத்திற்கொள்ளாது தோட்டத்திற்கு சம்பந்தமில்லாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வெளியாட்களுக்கு பிரதேச செயலாளர் தோட்ட காணிகளை பகிர்தளித்து வருவதாகவும் தற்போது வெளியாட்கள் வீடுகளை அமைத்து வருவதாகவும் அமைச்சரிடம் முறையிடப்பட்டது. 

மக்களின் முறைப்பாட்டுக்கு செவிசாய்க்கும் வகையில் அமைச்சர் பழனி திகாம்பரம் நேற்று தெல்தொட்ட பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்து அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். 

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்களும், தெல்தொட்ட பிரதேச செயலாளர், தெல்தொட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார். 

கலந்துரையாடலின் முடிவில் தெல்தொட்ட லிட்டில்வெளி தோட்டத்தில் முன்னெடுக்கப்படு வரும் காணிப் பகிர்வை உடனடியாக இடைநிறுத்தி வைக்குமாறு பிரதேச செயலாளருக்கு அமைச்சர் பழனி திகாம்பரம் உத்தரவிட்டார். 

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இதுவிடயம் தொடர்பாக கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.