வவுனியா தர்மலிங்கம் வீதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தர்மலிங்கம் வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் மற்றும் கொட்டகைகள் அமைத்து வியாபாரம் மேற்கொண்டவர்களை வவுனியா நகரசபை அகற்றியுள்ளது.
இதன்போது குறித்த சம்பவங்களை பற்றி செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது குறித்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது குறித்த ஊடகவியலாளரின் புகைப்படக் கருவி (camera) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர் அணிந்திருந்த இரண்டு பவுண் பெறுமதியான சங்கிலி ஒன்றும் காணாமல் போயுள்ளது.
இதனையடுத்து, நகரசபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து தாக்குதலாளிகளிடம் இருந்து ஊடகவியலாளரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஸ்கரன் கதீசன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைபாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

