ஒளிமயமான வாழ்வுக்கு சேமிப்பு அவசியம்




செய்திகள்- ஹுஸைன்

எதிர்கால சமூகத்தின் வாழ்வு ஒளிமயமானதாக சேமிப்பு மிகவும் அவசியம் என மட்டக்களப்பு அரசடி மக்கள் வங்கியின் முகாமையாளர் எஸ். சரவணபவன் தெரிவித்தார்.

மக்கள் வங்கியின் பரிசளிப்பு நிகழ்வும் ஒளிவிழாவும் வியாழக்கிழமை அரசடியில் உள்ள வங்கி மண்டபத்தில் நடைபெற்றபோது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அவர் மேற்சொன்ன கருத்தை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் அடிகளார் இக்னேசியஸ் மக்கள் வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முன்னாள் உதவி முகாமையாளர் ஏ. ரவீந்திரன், மாவட்ட பிராந்திய உதவி முகாமையாளர் ஏ. சர்வேந்திரன் உட்பட வாடிக்கையாளர்களும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் குறுந்தகவல் ஊடாக அதிக கொடுக்கல் வாங்கல்களைக் கொண்டவருக்கு பரிசு வழங்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மக்கள் வங்கி பிராந்திய அலுவலகத்தில் சிறிய நடுத்தர கைத்தொழில் பிரிவு முகாமையாளராக கடமையாற்றும் அசங்க இரோசன தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதையடுத்து அவர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.