இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் மலையகப் பிரதேசங்களிலும் இந்திய அரசாங்கம் வீட்டு வதிகளையும் மருத்துவமனை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா வெள்ளியன்று வவுனியாவில் தெரிவித்தார்.
இந்திய அரசின் நிதியுதவியில் வவுனியா மாவட்ட-பொது மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளைக் கொண்ட கட்டடத்தின் திறப்புவிழாவில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் 4000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், டிக்கோயா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 படுக்கை வசதிளைக் கொண்ட நோயாளர் விடுதி, தேவையான மருத்துவ உபகரணங்களுடன், அதனை பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கப்படவுள்ளதாகவும் இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் 40 ஆயிரத்து 600 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய வை.கே.சின்ஹா மீதமுள்ள வீடுகளும் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறினார்.
கட்டி முடிக்கப்பட்ட இந்திய வீடுகளில் 95 வீதமானவை வடக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு 2.6 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் 436 மில்லியன் ரூபா நன்கொடை உதவி என்றார் வை.கே.சின்ஹா.
வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நோயாளர் விடுதிக் கட்டடத் தொகுதிக்கான உபகரணங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இலங்கை-இந்திய அரசுகளுக்கிடையில் இலங்கைப் பிரதமர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தபோது கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் பசில் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுனர் பளிகக்கார, வடமாகாணசபையின் அவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
