எம்பிலிபிடிய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 21 பொலிஸார் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் எம்பிலிபிடிய புதிய நகர் (நவ நகர்) பகுதி வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் காயமடைந்த நான்கு பொலிஸார் உட்பட ஏழ்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இன்று அதிகாலை சம்பவத்தில் காயமடைந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து எம்பிலிபிடிய பகுதியில் பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து கருத்து வௌியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, மரணம் குறித்த நீதவான் விசாரணை மற்றும் நீதிமன்ற வைத்திய அதிகாரியின் பரிசோதனைகளை அடுத்து, குடும்பஸ்தர் பலியானமைக்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக சிலரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் அங்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் குழப்பம் விளைவித்ததாக கூறப்படும் நபர்களை கைதுசெய்ய முற்பட்ட வேளை மாடியில் இருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஒருவர் குதித்ததாகவும் அவரே சம்பவத்தில் பலியானதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மேற்பார்வையில் வேறாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து குறித்த நபர் கீழே குதித்துள்ளதாகவே தெரியவந்துள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொலிஸாரைத் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ், எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

