வெளிப்படைத் தன்மை, தகைமை அடிப்படை, ஆகியவற்றினால் வடக்கு முன்னோக்கிச் செல்கின்றது




(ரி.கண்ணன்)
வெளிப்படைத் தன்மை, தகைமை அடிப்படை, நேர்மையான நிர்வாகம் ஆகியவற்றினால் வடமாகாணம் முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் பல திணைக்களங்கள் மற்றும் அமைச்சு மட்ட அலுவலகங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காகப் போட்டிப் பரீட்சைகள் மூலமும் நேர்முகத் தேர்வின் மூலமும் தெரிவு செய்யப்பட்ட 640 பேருக்கு இன்று வியாழக்கிழமை கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் பலர் அரசாங்க வேலை மாத்திரமே வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது தவறான ஒரு நிலைப்பாடு எனத் தெரிவித்த அவர், இன்று அரசாங்கம் நாட்டில் தனித்து இயங்குவது கடினமானது. 
தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் எனப் பலவும் அரசாங்கத்திற்கு ஒத்திசைவாக செயற்பட்டு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இளைஞர் யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க முன்வர வேண்டும் எனவும் தன்னம்பிக்கையுடன் தொழில் முயற்சியாளராக மாற முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வடபகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
மக்களுடன் பரிவாக பழகி சாதி, மதம் பார்க்காது கடமையில் ஈடுபட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.