
ஒற்றையர் பிரிவு சர்வதேச டென்னிஸிலிருந்து லெய்டன் ஹீவிட் ஓய்வு.
ஹீவிட் டென்னிஸ் வாழ்க்கையில் காயங்களின் பாதிப்பு அதிகம் இருந்தது
ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் லெய்டன் ஹீவிட் ஒற்றையர் பிரிவில் சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
தற்போது நடந்துவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் அவர் தனது கடைசி ஒற்றையர் ஆட்டத்தை விளையாடினார்.யுஎஸ் ஓபன் மற்றும் விம்பிள்டன் ஆகிய பட்டங்களை வென்ற ஹீவிட், இருபது வயதில் உலகின் முதலாம் தரவரிசை ஆட்டக்காராக வந்து, உலகிலேயே மிகக் குறைந்த வயதில் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆண் டென்னிஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
தனது டென்னிஸ் வாழ்க்கையில், காயங்கள் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறும் நிலைக்கு பலமுறை சென்றிருந்தவர் அவர்.
தற்போது முப்பது நான்கு வயதாகும் அவர், தனது இருபதாவது ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை தற்போது விளையாடினார்.
இரட்டையர் ஆட்டங்களில் தொடர்ந்து விளையாட ஹீவிட் தீர்மானித்துள்ளார்.
டேவிஸ் கோப்பையிலும் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக அவர் நீடிப்பார்.
