இந் நாட்டின் பொன் விழாக் கண்ட அரசியல் கட்சிகளும் ஏனைய கட்சிகளும் தேசியப்பட்டியலினை விவகாரத்தை ஏதோ ஒரு விதமாகக் கையாண்டுவிட்டது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. திராணியற்ற தலைவரின் தகமையும் இதுதான்.
சில தடவைகள் தேசியப்பட்டியல் மூலம் அங்கத்தவராகி, மீண்டும் கேட்டு ஆசனங்களைச் சூடாக்குபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். தலைவர் தராது விட்டால் அவரது அந்தரங்களை வெளிப்படுத்துவேன் என்றுரைப்போரும், தராது போனால் கட்சியினை உடைப்பது என்று இன்னுமொருவர் ரகசியப் பேச்சுவாா்தை நடத்துவதும் அக்கட்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது.மொத்தத்தில் தேசியப்பட்டியலைவிட பிச்சைப்பாத்திரம் இவர்கள் ஏந்தலாம்.
நிலைமை இப்படியிருக்க, இன்று
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹாபிஸ் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை நியமிக்க கட்சித் தலைமை எடுத்த தீர்மானத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டன.
இந்த பதவிகளுக்காக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியையும் கட்சிக்காக அர்ப்பணிப்பு செய்த ஒருவரையும் நியமிக்க கட்சியின் அதி உயர் பீடம் தீர்மானித்திருந்தது.
எனினும் பின்னர், பதவி விலகும் உறுதிமொழியின் அடிப்படையில் முதலில் குறித்த இரண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக ஏ.ஆர்.ஏ ஹாபீஸ் மற்றும் ஏ.எல். சல்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
முன்னதாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஏ.ஆர்.ஏ. ஹாபீஸ் பதவியை விலகிய போதிலும் அந்தப் பதவிக்கு தம்மை நியமிக்கவில்லை என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
தம்மை நியமிக்காது எம்.எஸ்.தௌபீக்கை நியமித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

