சுமார் ஏழரை ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான செல்வத்தை உலக செல்வந்தர்கள் வரிச்சலுகைக்காக வெளிநாடுகளில் வைத்துள்ளனர்'
உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், அதாவது கிட்டத்தட்ட 7 கோடியே 30 லட்சம் பேர் உலகின் ஏனைய மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திலும் பார்க்க அதிக செல்வத்துக்கு சொந்தக்காரர்கள் என்று ஆக்ஸ்ஃபாம் எனப்படுகின்ற உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் கூறுகின்றது.
உலக சனத்தொகையின் அரைவாசியான 3.6 பில்லியன் அளவான வறிய மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திலும் பார்க்க அதிக செல்வம் உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ள 62 பேர் வசம் உள்ளதாகவும் உலக ஏற்றத்தாழ்வு பற்றிய ஆக்ஸ்ஃபாமின் புதிய அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
சுமார் ஏழரை ட்ரில்லியன் டாலர் (ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி டாலர்) மதிப்பிலான செல்வத்தை உலக செல்வந்தர்கள் தங்களின் தாய்நாடுகளுக்கு வெளியே உள்ள வரிசெலுத்துவதிலிருந்து தப்பிக்கக்கூடிய இடங்களில் வைத்துள்ளதாக அந்தத் தொண்டுநிறுவனம் கூறுகின்றது.
இந்த வரி ஏய்ப்பை முறியடிக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆக்ஸ்ஃபாம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு பதுக்கிவைக்கப்பட்டுள்ள செல்வத்தில் சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு செல்வந்த ஆப்பிரிக்கர்களே சொந்தக்காரர்கள் என்றும் கூறுகின்ற ஆக்ஸ்ஃபாம், அதனால் ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் ஆண்டுக்கு 1400 கோடி டாலர் வரி இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

