முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சேகர் ரஞ்சித் என்ற உள்ளுர் மீனவரின் படகை கூட்டமாக அந்தப் பகுதிக்குள் வந்த இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளில் ஒன்று மோதியதில் படகு சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படகு சேதமடைந்ததையடுத்து கடலில் வீழ்ந்த தன்னையும் தன்னுடன் இருந்த இன்னொரு மீனவ தொழிலாளியையும் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த உள்ளுர் மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கூட்டி வந்ததாக சேகர் ரஞ்சித் என்ற உள்ளுர் மீனவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து கரையில் இருந்த உள்ளுர் மீனவர்கள் சிலர் 5 படகுகளில் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவைப் படகு ஒன்றை அதில் இருந்த 8 இந்திய மீனவர்களுடன் கரைக்குக் கொண்டு வந்ததையடுத்து, அங்கு குழப்பமான சூழல் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, உடனடியாக அந்த இடத்திற்கு கடற்படையினர், பொலிசார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் விரைந்ததையடுத்து, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
பாதிக்கப்பட்ட மீனவரான ரஞ்சித் சேதமடைந்த தனது படகு, இயந்திரம் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான வலைகள் என்பவற்றிற்கு இழப்பீடு தர வேண்டும் அல்லது பதிலாக தொழில் உபகரணங்களை வழங்க வேண்டும் என்று கோரினார்.
கடன்பட்ட நிலையிலேயே தான் தனது மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்திருந்ததாகவும், அவை சேதமடைந்ததை அடுத்து தன்னால் தொழிலுக்குப் போக முடியாது என்றும் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மீனவரின் நிலைமை குறித்து பிரதேச செயலாளர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோருடன் கலந்தாலோசித்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், தொண்டு நிறுவனங்களிடமிருந்து மீனவர்களுக்கு உதவி கிடைக்கும்போது முன்னுரிமை அடிப்படையில் இந்த மீனவருக்கு உதவி செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

