கடந்த அரசாங்க காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ஊடகக் கண்காட்சி நடத்தாமல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை பலவந்தப்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
ஊழல் பேர்வழிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு போதியளவு கால அவகாசம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், அரசாங்கம் ஊடகங்களில் வெறும் காட்சிகளை நடாத்திவிட்டு சும்மா இருந்து விடுவதாகவும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்றைய சிங்கள ஞாயிறு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளர் ஒவ்வொரு வாரமும் ஊழல் மோசடிகள் தொடர்பில் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இருப்பினும், அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்தபாடில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் பேர்வழிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதில் அரசாங்கம் தள்ளிப் போட்டுவருவதாகவே கருதமுடியுமாக இருப்பதாகவும், இதனாலேயே மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

